ஐந்து பிரிவுகளை உள்ளடக்கிய அராலிக் கிராமத்தின் மத்தியிலே ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோயாதம் என்னும் ஐந்து திருமுகங்களுடன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களையும் புரிந்து கொண்டு ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் வீற்றிருக்கின்றார். பரிவார மூர்த்தங்கள் அவரைச் சுற்றிவர அவரவர்க்கு ஆகமரீதியாக வகுக்கப்பட்ட இடங்களில் வீற்றிருக்கின்றனர். அங்கே நித்திய, நைமித்திய கருமங்கள் யாவும் காலத்துக்குக் காலம் ஆகம முறைப்படி தவறாது நடைபெற்று வருகின்றன. பொதுவாக உலக மக்கள் யாவருக்கும், சிறப்பாக அராலி, வட்டுக்கோட்டை கிராம மக்களுக்கும் வழிபாடு செய்வதற்கேற்ற சிவஸ்தலம் இவ்வாலயம் என்றால் மிகையாகாது.

மேலும் இத்தேவஸ்தானம் அக்காலத்தில் வண்ணாம்புலம் சிவன்கோயில், அராலி சிவன்கோயில், அராலி விசுவநாதசுவாமி கோயில், கொட்டைக்காடு சிவன்கோயில் என வழங்கி வந்தமையால் பழைய உறுதிச் சாதனங்களிலோ, கையெழுத்துப் பிரதிகளிலோ, மேற்கூறிய ஏதாவது பெயர் காணப்படலாம். தற்பொழுது அராலி வண்ணப்புரம் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் தேவஸ்தானம் என வழங்கப்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்திலிங்கச் செட்டியாரும், பிரம்மஸ்ரீ. நா. விஸ்வநாத சாஸ்திரிகளும் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வந்து, யாழ்ப்பாணத்தில் வந்து செட்டியார் விரும்பிய லிங்கம் ஒன்றை சாஸ்திரிகளை எடுக்கச் சொல்ல அவர் ஒன்றை எடுத்து இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தாரென்றும், மற்றைய லிங்கம் வண்ணார்பண்ணையில் செட்டியார் அவர்களாற் பிரதிஷ்டை செய்விக்கப் பெற்றதென்றும் இருவருக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டென்றும், வண்ணார்பண்ணைச் சிவனும், வண்ணபுரம் சிவனும் ஒரே காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பெற்றனவென்றும் அக்காலத்திலிருந்து நம் மூதாதையார் வாயிலாக வரிசைக் கிரமமாக அறிந்துள்ளோம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க உண்மை.

 

இத்தேவஸ்தானம் இற்றைக்குப் பல ஆண்டுகட்கு முன் அராலி மேற்கிலிருந்து காலஞ்சென்ற சந்திரசேகரஐயர் இராமலிங்கஐயர் என்பவர் அவ்வூர் பரமர் விநாயகரிடத்தில் 1713ம் ஆண்டு  ஐப்பசி மாதம் 8ம் திகதி அறுதி வாங்கிய ஓலை உறுதிப்படி அராலி தெற்கும் மேற்கும் இறையிலிருக்கும் வண்ணாம்புலம் என்னும் காணியிலும், குறித்த இராமலிங்க ஐயரின் சகோதரர்களாலும், அப்பரம்பரையினாலும் வாங்கி விடப்பட்ட காணியிலும், சிதம்பர உடையார் என்பவராலும் சந்ததியினராலும் வாங்கி விடப்பட்ட காணியிலும் குறித்த இராமலிங்க ஐயரின் பேரனாகிய நா. விஸ்வநாதரசாஸ்திரியார் அவர்களால் 1796ம் ஆண்டு சித்திரை மாதம் 5ம் திகதி சங்குஸ்தாபனம் (அத்திபாரம்) செய்யப்பெற்று ஊர்ப் பொதுத் தருமமாகக் கோவில் கட்டுவித்துக் காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டுவந்து 1843ம் ஆண்டு ஆனி மாதம் 24ம் திகதி பிரதிஷ்டை செய்யப்பெற்று விசுவநாதசுவாமி கோயில் என்னும் பெயருடன் அக்காலத்தில் வழங்கி வந்தமை அறியக்கூடியதாக இருந்தது.

இற்றைக்கு நூற்றைம்பது வருடங்களுக்கு முன் அதாவது கோயில் ஆரம்ப காலத்தில் விநாயகர் கோயில், விசுவநாதசுவாமி கோயில், விசாலாட்சி அம்பாள் கோயில், சுப்பிரமணியர் கோயில், வைரவர் கோயில் என்பனவும் பின்பு காலத்துக்குக் காலம்  இற்றைவரையில் (பல வருடங்கள் முன் பின்னாக) சதாசிவேஸ்வரன் கோயில், சனீஸ்வரன் கோயில், சண்டேசுரர் கோயில், சந்தானகோபாலர் கோயில், தட்சணாமூர்த்தி கோயில், நவக்கிரக கோயில் முதலியனவும் கட்டப்பெற்று அந்தந்த மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கின்றன.

உற்சவ மூர்த்தங்களாக விநாயகர், கௌரியம்பாள் சமேத சந்திரசேகரர், அல்லியங்கோதா சமேத சோமாஸ்கந்தர், கஜாவல்லி மகாவல்லி சமேத சுப்பிரமணியர், சிவகாமியம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர், (ஸ்ரீ நடராஜப் பெருமான்) சண்டேசுரர் முதலிய தெய்வாம்ச மூர்த்தங்களும் பிரதிஷ்டை செய்யப்பெற்று அவரவர்க்குரிய திருவிழா நாட்களில் வீதிவலம் வந்து அன்பர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்கள்.